பர்தா அணிய தடை விதித்த விவகாரம் பள்ளிகளில் சீருடை கட்டுப்பாட்டை கல்வித்துறை நிர்ணயிக்கும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்


பர்தா அணிய தடை விதித்த விவகாரம் பள்ளிகளில் சீருடை கட்டுப்பாட்டை கல்வித்துறை நிர்ணயிக்கும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2022 8:20 PM IST (Updated: 9 Feb 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி பள்ளிகளில் சீருடை கட்டுப்பாட்டை கல்வித்துறை நிர்ணயிக்கும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

அரியாங்குப்பம்
புதுச்சேரி பள்ளிகளில் சீருடை கட்டுப்பாட்டை கல்வித்துறை நிர்ணயிக்கும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சுடுமண் சிற்ப பூங்கா

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் சுடுமண் சிற்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. 
விழாவிற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சுடுமண் சிற்ப பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் பிரியதர்ஷினி, பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்ப கலைஞர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொருளாதாரம் உயரும்

புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பட்ஜெட்டிலும் புதுச்சேரிக்கான சுற்றுலா திட்டங்கள் வர வாய்ப்புள்ளது. 
சுற்றுலாத் துறையை மேம்படுத்த சில திட்ட வரைவுகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் சில திட்டங்கள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அவ்வாறு வரும் போது அண்டை மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும். சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய தொழில் முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

புதுவைக்கு கிடைக்கும்

கலை மற்றும் கைவினை கிராமத்தில் ரூ.35 லட்சம் செலவில் களிமண் சிற்ப பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் வகையில், களிமண் சிற்பத்திற்கு ‘புவிசார்’ குறியீடு கிடைத்திருக்கிறது. இது புதுச்சேரிக்கான பெருமை. பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் முனுசாமி அதனை முன்னெடுத்துச் செல்கிறார். 
பெரிய வீடுகளில் சுடுகளிமண் சிற்பங்களை வைத்தால் கலைஞர்களுக்கு அது உதவியாக இருக்கும். கவர்னர் மாளிகை வளாகத்திலும் களிமண் சிற்பம் வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.
வரும் காலத்தில் ஆக்கபூர்வமான பல்வேறு திட்டங்கள் புதுச்சேரிக்கு கிடைக்கும். இங்கு ரூ.5 கோடி செலவில் 40 கிலோ வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களால் வளர்ச்சியடைந்த மாநிலமாக புதுச்சேரி மாறும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும், அவர் அளித்த பதில் வருமாறு:-

பாகுபாடு இல்லை

கேள்வி:- சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உங்களை சந்தித்து பேசினார்களே?
பதில்:- எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இல்லை. மனநிறைவுடன் தான் உள்ளனர். அவர்கள் தங்களது தொகுதிகளுக்கு சில திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். 
புதுச்சேரிக்கென்று சில திட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அரசு அவர்களுக்கு முழுமையான ஆதரவு அளிக்கும். முதல்-அமைச்சர் ரங்கசாமி எவ்வித பாகுபாடும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்.
அவர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டேன். அவர்கள் என்னுடைய வேண்டுகோளை ஏற்று அவர்களது தொகுதிகளில் தடுப்பூசித் திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து சென்றிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தேன்.

சீருடை கட்டுப்பாடு

கேள்வி:- கர்நாடகா மாநிலத்தில் பர்தா அணியும் பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ள நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் பள்ளி மாணவி பர்தா அணிந்து வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளதே?
பதில்:- புதுச்சேரி மாநிலத்தில் சீருடையை பொறுத்தவரை பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்யும். சீருடை கட்டுப்பாட்டை கல்வித்துறை நிர்ணயிக்கும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story