அரசு பஸ்சில் தவறவிட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு


அரசு பஸ்சில் தவறவிட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 10 Feb 2022 12:20 AM IST (Updated: 10 Feb 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்சில் தவற விட்ட குழந்தை சென்னை தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது

அரசு பஸ்சில் தவற விட்ட குழந்தை சென்னை தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
5 மாத குழந்தை
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் கவியரசு (வயது 35). இவரது மனைவி விமலா (28). இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஸ்ரீ வர்ஷன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கவியரசு தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறி நீலாங்கரை பஸ் நிலையத்தில் இருந்து சென்னை-புதுச்சேரிக்கு செல்லும் தமிழக அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டமாக இருந்ததால் கவியரசு தனது குழந்தையை இருக்கையில் சரஸ்வதி என்ற பெண்ணிடம் கொடுத்தார்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
அடுத்த பஸ்நிறுத்தத்தில் சிறுநீர் கழிப்பதற்காக கவியரசு இறங்கியதாக கூறப்படுகிறது. அவர் வருவதற்குள் பஸ் கிளம்பி சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, குழந்தையை கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து குழந்தை விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே நடந்த சம்பவத்தை கவியரசு தனது மனைவி விமலாவிடம் தெரிவித்தார். பின்னர் பத்திரிகைகளில் வந்த செய்திகளை பார்த்து 2 பேரும், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்களிடம் சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் நல தலைவர் சசிகுமார், குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி ஆகியோர் விசாரணை நடத்தினர். குழந்தையின் பிறப்பு சான்றிதழை சரிபார்த்தனர். இதில் அவர்களது குழந்தை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கவியரசு-விமலா தம்பதியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

Next Story