சென்னை வந்த ரெயிலில் 4 கிலோ தங்க நகைகள் சிக்கின


சென்னை வந்த ரெயிலில் 4 கிலோ தங்க நகைகள் சிக்கின
x
தினத்தந்தி 9 Feb 2022 9:15 PM GMT (Updated: 9 Feb 2022 9:15 PM GMT)

கோவையில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் 4 கிலோ தங்க நகைகள் சிக்கின. இதுகுறித்து நகைக்கடை ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம்,

ரெயில்களில் சட்டவிரோதமாக பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் அந்த ரெயிலில் டி-4 கோச்சில் இருந்து ஒருவர் இறங்கி கையில் பையுடன் 5-வது நடைமேடைக்கு வேகமாக சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

4 கிலோ நகைகள் பறிமுதல்

இதையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் கொத்து கொத்தாக தங்க நகைகள் இருந்தன. மொத்தம் 4 கிலோ தங்க நகைகள் இருந்தன. உடனே போலீசார் அந்த பையை வைத்திருந்தவரிடம் விசாரணை நடத்தினர்

விசாரணையில், அவர் கோவை செல்வபுரம் சரோஜினி நகரை சேர்ந்த அழகிரி (வயது 46) என்பதும், கோவையில் ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர் கோவையில் இருந்து நகைகளை எடுத்துக்கொண்டு வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம் பகுதிகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க செல்வதாக போலீசாரிடம் கூறினார்.

ரூ.10 லட்சம் அபராதம்

ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த நகைகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அழகிரியிடம் கோவையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு செல்லும் டிக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் கூறுவது உண்மையா? அல்லது சட்டவிரோதமாக நகைகளை எடுத்து சென்றாரா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 78 லட்சத்து 54 ஆயிரத்து 200 இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் அந்த நகைகள் சேலம் வருமான வரித்துறை அதிகாரி பிரகாசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த நகைகளுக்கு ரூ.10 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

Next Story