அம்பத்தூரில் மாயமான 1½ வயது குழந்தை ‘லாக்டவுன்’ கோயம்பேடு பஸ் நிலையத்தில் மீட்பு


அம்பத்தூரில் மாயமான 1½ வயது குழந்தை ‘லாக்டவுன்’ கோயம்பேடு பஸ் நிலையத்தில் மீட்பு
x
தினத்தந்தி 10 Feb 2022 2:50 AM IST (Updated: 10 Feb 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் மாயமான 1½ வயதான குழந்தை ‘லாக்டவுன்’ 3 நாட்களுக்கு பிறகு கோயம்பேடு பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டது. குழந்தையை பஸ் இருக்கையில் போட்டுவிட்டு கடத்தல் ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகே புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர், தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் அங்கேயே தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இதில் கடைசி ஆண் குழந்தை, கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிறந்ததால் செல்லமாக ‘லாக்டவுன்’ என பெயரிட்டு அழைத்து வந்தனர்.

தற்போது 1½ வயதான குழந்தை ‘லாக்டவுன்’, கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மாயமானது. குழந்தையை எல்லா இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த கிஷோர், இதுபற்றி அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை ‘லாக்டவுனை’ யாராவது கடத்திச்சென்றார்களா? என விசாரித்து வந்தனர். மேலும் அருகில் உள்ள ஏரியில் குழந்தை தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் அங்கு தீயணைப்பு வீரர்கள் மூலம் தேடி வந்தனர்.

கோயம்பேட்டில் மீட்பு

இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பஸ்சின் இருக்கையில் குழந்தை ஒன்று நீண்டநேரம் அழுது கொண்டே இருந்தது. யாரும் அந்த குழந்தைக்கு உரிமை கோரி வரவில்லை. இதனால் அங்கிருந்த பயணி ஒருவர், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பஸ்சின் இருக்கையில் இருந்த குழந்தையை மீட்டு விசாரித்தனர். அதில் கடந்த 6-ந்தேதி அம்பத்தூரில் மாயமான வடமாநில தொழிலாளி கிஷோரின் குழந்தை ‘லாக்டவுன்’ என தெரியவந்தது. மாயமான 3 நாட்களுக்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

மர்மநபர்கள் குழந்தையை கடத்திச்சென்று 3 நாட்கள் மறைத்து வைத்து உள்ளனர். ஆனால் போலீசாரின் தேடுதல் தீவிரம் அடைந்ததால் பயந்துபோய் குழந்தையை கோயம்பேட்டில் உள்ள பஸ்சில் விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் குழந்தையை பஸ்சில் விட்டுச்சென்ற கடத்தல் ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் குழந்தை ‘லாக்டவுன்’ மீட்கப்பட்டது குறித்து அம்பத்தூர் போலீசார் மற்றும் குழந்தையின் பெற்றோருக்கு கோயம்பேடு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கோயம்பேடு போலீஸ் நிலையம் வந்த கிஷோர் மற்றும் அவரது மனைவியிடம் குழந்தை ‘லாக்டவுன்’ இன்ஸ்பெக்டர் ராமசாமி முன்னிலையில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. மாயமான தங்கள் குழந்தை 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Next Story