தமிழ்நாட்டில் மதுபானங்களை ‘பிளாஸ்டிக் பாட்டில்களில்' விற்பனை செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி


தமிழ்நாட்டில் மதுபானங்களை ‘பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 10 Feb 2022 4:34 AM IST (Updated: 10 Feb 2022 4:34 AM IST)
t-max-icont-min-icon

மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பாய் திகழ்கிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் விவசாயத்துக்கு என்று மிகப்பெரிய வரலாறு உள்ளது. தமிழ் கலாசாரத்தின் ஒரு அங்கமாக விவசாயம் திகழ்வதை சங்க கால நூல்கள் எடுத்துரைக்கின்றன.

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 70 சதவீதம் பேரின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில்தான் உள்ளன.

அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்களை விற்பனை செய்கிறது.

விவசாயிகள் காயம்

ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறுகின்றன. அதுவும், அந்த மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த மதுவை குடிப்போர் காலி கண்ணாடி பாட்டில்களை விவசாய நிலங்களில் தூக்கி வீசுகின்றனர். உடைந்த கண்ணாடி பாட்டில்களை மிதிக்கும் விவசாயிகளின் கால்களில் வெட்டுகிறது.

பாட்டில்கள்

நாடு முழுவதும் குளிர்பானங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கப்படுகின்றன. அண்டை மாநிலமான புதுச்சேரியில் மது வகைகள் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதுபோல, மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அதிக தீங்கு

அப்போது நீதிபதிகள், சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள்தான் அதிக தீங்கை ஏற்படுத்துகின்றன. கண்ணாடி பாட்டில்களை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் பால் கூட கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படுகிறது. பால் விற்பனைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்துவதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Next Story