நீட் தேர்வு பிரச்சினை வெறிச்செயல்... பா.ஜ.க. தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - ரவுடி கைது


நீட் தேர்வு பிரச்சினை வெறிச்செயல்... பா.ஜ.க. தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - ரவுடி கைது
x
தினத்தந்தி 11 Feb 2022 2:55 AM IST (Updated: 11 Feb 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி அதிரடியாக கைது செய்யப்பட்டார். நீட் தேர்வை ஆதரிப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கைதான ரவுடி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை தியாகராயநகர், வைத்தியராமன் தெருவில், தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. நள்ளிரவு 1.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், இந்த அலுவலகம் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடி விட்டார். கட்சி அலுவலகத்திற்குள் விழுந்த பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. அங்கு தூங்கிய கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாம்பலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தடய அறிவியல் நிபுணர்களும் சென்று உரிய தடயங்களை சேகரித்தனர்.

மாம்பலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கேமரா காட்சியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அதிரடி விசாரணை நடத்தி, பெட்ரோல் குண்டு வீசிய நபரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து விட்டனர். குண்டு வீசிய செய்தியோடு, குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவலுடன் போலீசார் நேற்று காலையிலேயே செய்திக்குறிப்பு வெளியிட்டு விட்டனர்.

கைதானவர் பிரபல ரவுடி ஆவார். அவரது பெயர் வினோத் என்ற கருக்கா வினோத் (வயது 36). சென்னை நந்தனம், எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர். 4 கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. ரவுடி வினோத் பெட்ரோல் குண்டுகள் செய்வதில் கைதேர்ந்த நிபுணர். பெட்ரோல் குண்டுகள் செய்து விற்பனை செய்வார், என்று கூறப்படுகிறது.

மாம்பலம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, அந்த கடை மீதே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளது. போலீசார் தன்னை தாக்கியதை கண்டித்து, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் மீதும் இவர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளார். இந்த வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார்.

போலீஸ் விசாரணையில், ரவுடி வினோத் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு பா.ஜ.க. ஆதரவாக செயல்படுவதால், அதை கண்டிக்கும் வகையில், பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக, வினோத் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் மத ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ரவுடி வினோத் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்தவுடன் கட்சி அலுவலகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். தற்போது அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story