காஞ்சீபுரம் மாநகராட்சி 36-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை - தேர்தல் போட்டியில் மிரட்டப்பட்டாரா?


காஞ்சீபுரம் மாநகராட்சி 36-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை - தேர்தல் போட்டியில் மிரட்டப்பட்டாரா?
x
தினத்தந்தி 11 Feb 2022 5:32 AM IST (Updated: 11 Feb 2022 5:32 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டார். தேர்தல் போட்டியில் மாற்று கட்சியினர் அவரை மிரட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வளத்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் ஜானகிராமன் (வயது 36). அ.தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் மாநராட்சியில் 36- வது வார்டு உறுப்பினராக போட்டியிடுகிறார். அந்த பகுதியில் அ.தி.மு.க. சாதனைகளை எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது மேடையில் ஜானகிராமனையும் அறிமுகப்படுத்தி பேசினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜானகிராமன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டர்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதை கேள்விப்பட்டதும், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று வேட்பாளர் ஜானகிராமன் மர்மமான முறையில் இறந்ததாக கூறி முறையிட்டார்.

பின்னர் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட கழக பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் பாலாஜி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் வாலாஜாபாத் மார்க்கெட் வி. அரிக்குமார், அ.தி.மு.க. நிர்வாகி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து உயிரிழந்த ஜானகிராமனின் தந்தை வேணுகோபால், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரராஜி வழக்குப்பதிவு செய்து தேர்தல் போட்டியில் மாற்று கட்சியினர் மிரட்டியதால் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டதால் 36-வது வார்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Next Story