காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: உரிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் - தமிழக அரசு வலியுறுத்தல்


காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: உரிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் - தமிழக அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2022 12:37 AM IST (Updated: 12 Feb 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15-வது கூட்டத்தில், வரும் பாசன ஆண்டில் உரிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

சென்னை,

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15-வது கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், கேரள மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ஜோஸ், கர்நாடக மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங், புதுச்சேரி மாநில ஆணையாளர் மற்றும் செயலாளர் ஏ.விக்ராந்த் ராஜா, தமிழ்நாடு காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் எல்.பட்டாபிராமன், நீர்வளத்துறை துணைச் செயலாளர் என்.பாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி, வரும் பாசன ஆண்டில் மாத வாரியாக உரிய நீரை பிலிகுண்டுலுவில் கர்நாடகா வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பொருள் குறித்து கோர்ட்டில் வழக்கு நடைபெறுவதால் இக்கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே மேகதாது குறித்த விவாதம் தவிர்க்கப்பட்டது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story