‘வைரமுத்து இலக்கியம் 50’ இலச்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுதவந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘வைரமுத்து இலக்கியம் 50’ என்ற இலச்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை,
கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுத வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவரது முதல் கவிதை நூலான ‘வைகறை மேகங்கள்’ கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972-ல் வெளிவந்தது. அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்தார். இந்த 50 ஆண்டுகளில் அவர் 38 நூல்களும் 7 ஆயிரத்து 500 பாடல்களும் எழுதியிருக்கிறார். வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவின் தொடக்க நிகழ்வாக ‘வைரமுத்து இலக்கியம் 50’ என்ற இலச்சினையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அப்போது, வைரமுத்துவின் மகன்கள் மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
28 வயதில் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை எழுதியவர் வைரமுத்து. கருவாச்சி காவியம், வைரமுத்து கவிதைகள், மூன்றாம் உலகப்போர், தண்ணீர்தேசம், கொஞ்சம் தேநீர் நிறைய வானம், திருத்தி எழுதிய தீர்ப்புகள், தமிழாற்றுப்படை, பெய்யென பெய்யும் மழை என்று வைரமுத்துவின் படைப்புலகம் விரிந்துகொண்டே வந்திருக்கிறது.
திரைப்பட பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்ற ஒரே பாடலாசிரியர் வைரமுத்து தான். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசு விருதினையும் 6 முறை வென்றவர். 2003-ல் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
இலக்கியத்தின் பங்களிப்புக்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷண்’ விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் ‘சாதனா சம்மான்’ விருதும் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களிலும் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி, வைரமுத்துவுக்கு ‘கவிப்பேரரசு’ என்று பட்டம் அளித்தார்’.
மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழோடு புதுமையையும், அறிவியலையும் சேர்த்து சிறந்து விளங்கும் கவிதைகளை-திரைப்பட பாடல்களை தேனருவியென கொட்டி, தமிழால் நம்மை நனைக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் எழுத்து பணியின் பொன்விழா இலச்சினையை வெளியிட்டேன். தன் தமிழால் கவிப்பேரரசு நூறாண்டு கடந்தும் நம்மை ஆளட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வைரமுத்துவும் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story