அனகாபுத்தூரில் ஓட்டு கேட்டு சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை தெரு நாய் கடித்தது
அனகாபுத்தூரில் ஓட்டுகேட்டு சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை தெரு நாய் கடித்தது. சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தாம்பரம்,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் மற்றும் சுேயச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தினகரன் என்பவர் போட்டியிடுகிறார். இவர், நேற்று அனகாபுத்தூர் பாலாஜி நகர் 11-வது தெருவில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளர் தினகரனுடன் மேலும் 2 பேர் சென்றனர்.
அப்போது வேட்பாளர் தினகரனை விரட்டி வந்த தெரு நாய் ஒன்று, அவரது காலை கடித்தது. இதில் காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டார். பின்னர் ஓய்வெடுத்த தினகரன், மாலையில் மீண்டும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அனகாபுத்தூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தநிலையில் வீடு வீடாக ஓட்டுக்கேட்டு சென்ற வேட்பாளரை தெரு நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில், தான் வெற்றி பெற்றால் தெரு நாய்களை முதலில் ஒழிப்பேன் என வேட்பாளர் தினகரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story