காரில் கஞ்சா கடத்திய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்க்கு கஞ்சா கடத்திய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
வேலுர்,
காட்பாடி - லத்தேரி சாலையில் காட்பாடி போலீசார் சோதனையிட முயன்ற போது காட்பாடி போலீசாரை இடித்து தள்ளி சென்ற காரை பேரணாம்பட்டு, மேல் பட்டி ரெயில் நிலையம் அருகே போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.
காரில் 8 பேர் கொண்ட கும்பல் ஆந்திராவில் 35 கிலோ கஞ்சா வாங்கி அதில் 30 கிலோ கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் விற்றுள்ளனர். அந்த பணத்தையும் மீதி 5 கிலோ கஞ்சாவையும் எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு காரில் வரும் போது போலீசாரிடம் வசமாக சிக்கினர். அவர்களிடமிருந்து 1/2 கிலோ தங்கம், ரூ 3, 1/2 லட்சம் பணம், 2 துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் விசாரணையில் இவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆள் கடத்தல், வழிபறி கொள்ளைகளில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள் என தெரிய வந்தது. இதில் இம்ரான் (39) என்பவர் கடந்த ஆண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் பேரணாம்பட்டில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டு போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது கூட்டாளிகளான சென்னை ராயபுரத்தை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாதவன் (29) , மணிபாலன் (26), அசோக்குமார் (39), பாட்ஷா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடி தலை மறைவான இம்ரானின் அண்ணன் இம்ராஸ், ஹக்கம் , தேவா ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story