பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் மத்திய மந்திரி எல்.முருகன் பிரசாரம்
சென்னையில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் மொபட்டில் சென்று வாக்குகள் சேகரித்தார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து களமிறங்குகிறது. இந்த நிலையில் சென்னையில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் மொபட்டில் சென்று எல்.முருகன் ‘தாமரை’ சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றிருக்கிறார்கள் இதனால் பா.ஜ.க. வேட்பாளர்கள் மிகப்பெரும் உற்சாகத்தோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வின் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி உள்ளது. என்னதான் ஆளுங்கட்சியினர் பணபலம், அதிகார பலத்தை உபயோகித்தாலும் அதை எல்லாம் முறியடித்து, பா.ஜ.க. மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.
தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுப்போம் என்று சொன்னார்கள். இதுகுறித்து இதுவரை தி.மு.க. அரசு வாய் திறக்கவில்லை. சொன்னபடி நகைக்கடன், கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்யவில்லை.
ஆனால் மத்தியில் பா.ஜ.க. அரசு மிகப்பெரிய சாதனைகளை எல்லாம் செய்து வருகிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம் என மத்திய அரசின் சாதனை திட்டங்கள் பல இருக்கிறது. எது எது சாத்தியம் இல்லை என்று சொன்னார்களோ, அதையெல்லாம் சாத்தியப்படுத்திய அரசு பா.ஜ.க. அரசு தான். ராமர் கோவில் கட்டப்படுமா? என்றார்கள். இப்போது ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. மக்களுக்கு என்னென்ன நன்மையோ, அத்தகைய திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story