சென்னை மாநகராட்சி தேர்தல்: வாக்குபதிவு எந்திரங்களில் பெயர் பொருத்தும் பணி தீவிரம்
பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குபதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தலில் போட்டியிட 3 ஆயிரத்து 546 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்களில் மாநில தேர்தல் ஆணைய விதிப்படி இல்லாத 243 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 633 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தலில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கும் பணி 3 கட்டமாக நடைபெற்றது. அந்த வகையில் நேற்று முன்தினம் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 3-வது கட்ட குலுக்கல் நடைபெற்று வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் 2 ஆயிரத்து 670 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. 22 மையங்களில் நடைபெற்ற இந்த பணியை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரே நேரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும் வகையில் உள்ளன. இந்த நிலையில் சில வார்டுகளில் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் 2 வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல் 15 வேட்பாளர்கள் ஒரு எந்திரத்திலும், அடுத்த 15 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றொரு எந்திரத்திலும் பொருத்தப்பட்டு வருகிறது.
வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வரும் 18-ந் தேதி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேர்தலில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் ‘நோட்டா’ இடம்பெறவில்லை. மேலும் வாக்குப்பதிவு ஒப்புகை எந்திரமும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story