ஊசுட்டேரியில் துப்பாக்கியால் சுட்டு பறவைகள் வேட்டை
ஊசுட்டேரியில் துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்த கும்பலை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊசுட்டேரியில் துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்த கும்பலை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊசுட்டேரி
வில்லியனூர் அருகே உள்ள ஊசுட்டேரி 800 ஹெக்டேர் தமிழக-புதுவை பகுதிகளை உள்ளடக்கியது. பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வந்து செல்கின்றன.
அவைகள் சில நாட்கள் தங்கியிருந்து குஞ்சு பொரித்து விட்டு சொந்த நாடுகளுக்கு சென்று விடும். அதிகளவில் பறவைகள் வந்து செல்வதால் ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக புதுவை அரசு அறிவித்தது.
சமீபகாலமாக ஊசுட்டேரியில் பறவைகள் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வலையை விரித்தும் பறவைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக தெரிகிறது. இதுதொடர்பாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், பறவைகள் வேட்டையாடப்படுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
பறவைகள் வேட்டை
இந்தநிலையில் விழுப்புரம் வனப்பிரிவு மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து ஊசுட்டேரியில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பறவைகளை வேட்டையாடுவது தெரியவந்தது. இது குறித்து அவர்கள், புதுச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் புதுச்சேரி துணை வன காப்பாளர் வஞ்சுளவல்லி வனத்துறை வேளாண் அலுவலர் பிரபாகரன் மற்றும் ஊழியர்கள் இன்று காலை ஊசுட்டேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது ஊசுட்டேரி பகுதியில் பறவைகளை வேட்டையாடி சிலர் விற்பனைக்காக வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
துப்பாக்கியால் சுட்டு...
வனத்துறையினரை கண்டவுடன் பறவைகளை விற்றுக் கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து வேட்டையாடி விற்பனைக்காக வைத்திருந்த நத்தை குத்தி நாரை, ஆள்காட்டி குருவி, சிறிய குருவி, உன்னி கொக்கு, குருட்டு கொக்கு, வெள்ளை அரிவால் மூக்கன், கிளி என மொத்தம் 53 அரிய வகை பறவைகளை பறிமுதல் செய்தனர். அவற்றை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அந்த பறவைகளை பறிமுதல் செய்து புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
3 ஆண்டு சிறை
இதுகுறித்து துணை வன காப்பாளர் வஞ்சுளவல்லி கூறுகையில், ‘வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி பறவைகள், வனவிலங்குகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி வேட்டையாடுவது கடுமையான குற்றமாகும். பறவைகள், வனவிலங்குகளை வேட்டையாடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். வீட்டில் கிளிகள் வைத்திருப்போர் தாமாக முன்வந்து அவற்றை வனம் மற்றும் வனவிலங்கு இயக்குனரகத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story