தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணைய 36-வது கட்ட விசாரணை இன்று தொடக்கம்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணைய 36-வது கட்ட விசாரணை இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 14 Feb 2022 1:25 AM IST (Updated: 14 Feb 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய 36-வது கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இதில் ஆஜராக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே நடந்த 35 கட்ட விசாரணை வரை 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 1,042 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,516 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.

இந்த நிலையில் 36-வது கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நடக்கிறது.

இதில் ஆஜராவதற்காக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், உள்துறை செயலாளர் உள்பட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளனர்.

Next Story