சட்டசபை ஒத்திவைப்பு: மேற்கு வங்க கவர்னரின் செயல் மரபுகளுக்கு எதிரானது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
மேற்கு வங்கத்தில் சட்டசபையை ஒத்தி வைத்துள்ள அம்மாநில கவர்னரின் செயல் மரபுகளுக்கு எதிரானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
சென்னை,
மேற்கு வங்காளத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் அம்மாநில சட்டசபையில் அடுத்த மாதம் கவர்னர் உரையுடன் தொடங்க இருந்தது. அங்கு அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்காருக்கும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் வேளையில், கவர்னர் சட்டசபை கூட்டத்தொடரை திடீரென்று ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இது மேற்கு வங்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்காள கவர்னரின் செயலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-
மேற்கு வங்காள கவர்னர் அம்மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்தது, உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் உரிமை, நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை நிலை நிறுத்துவதற்கு மாநில தலைமை பொறுப்பில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
ஒருவருக்கொருவர் பரஸ்பரமான முறையில் மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story