சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்ற தீட்சிதர், பெண் மீது தாக்குதல்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்ற தீட்சிதர், பெண் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக 3 தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கணேஷ் தீட்சிதர் (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சித்சபைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றார்.
இதை பார்த்த அங்கிருந்த தீட்சிதர்கள் ராஜசெல்வம், சிவசெல்வம், சபேசன் ஆகியோர் கணேஷ் தீட்சிதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தீட்சிதர்கள், கனகசபைக்கு மேல் ஏறி தரிசனம் செய்யக்கூடாது. கோவிலின் விதிமுறைகளை மீறிய காரணத்தால் உங்களை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். இனி கோவிலுக்கு வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதோடு கணேஷ் தீட்சிதரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த கணேஷ் தீட்சிதர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் தீட்சிதர்கள் ராஜசெல்வம், சிவசெல்வம், சபேசன் அகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று காலை சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலா (37) என்பவர் நடராஜரை தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில தீட்சிதர்கள் ஜெயசீலாவை திட்டி, அடித்து வெளியே அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயசீலா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கணேஷ் தீ்ட்சிதர் கூறுகையில், சமீபத்தில் நடந்த தீட்சிதர்கள் ஆலோசனை கூட்டத்தில், நடராஜர் கோவிலில் கனகசபைக்கு சென்று பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்.
இதனால் என்னை தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து சஸ்பெண்டு செய்துவிட்டனர். இருப்பினும், நான் கனகசபைக்கு சென்று தரிசனம் செய்ய சென்றபோது தாக்கப்பட்டேன் என்றார்.
Related Tags :
Next Story