நாகர்கோவிலில் இன்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்


நாகர்கோவிலில் இன்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 14 Feb 2022 5:17 AM IST (Updated: 14 Feb 2022 5:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் என மொத்தம் 56 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் சுற்றிச்சுழன்று தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த அரசியல் கட்சித் தலைவர்களும், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.இந்தநிலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில தினங்களாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்து பேசினார்.

அதைத்தொடர்ந்து தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திருவனந்தபுரம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்த அவர் கன்னியாகுமரியில் இரவு தங்கினார்.

இன்று காலை 9.30 மணி அளவில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் அசிசி ஆலயம் அருகில் பிரசாரம் செய்கிறார். அப்போது அவர் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

பின்னர் அவர் பிரசாரத்தை முடித்து கொண்டு நாகர்கோவிலில் இருந்து நெல்லை மாவட்டம் புறப்பட்டு செல்கிறார்.

Next Story