‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமற்றது - சீமான் பேட்டி
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமற்றது என்று நெல்லையில் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மக்களை நம்பி சந்திக்கிறோம். அவர்கள் எங்களுக்கு வெற்றியை தருவார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது சர்வாதிகாரப்போக்கு. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்தது. எப்போதும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தேர்தலில் ஆட்களை கடத்தவில்லை. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் நடக்கும் தேர்தலின் போது ஆள் கடத்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கடத்தி, அடைத்து வைத்து மிரட்டுகிறார்கள்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமற்றது. மேற்கு வங்காளம் போன்ற மாநிலத்தில் மாநில தேர்தலையே பல கட்டமாக நடத்துகிறார்கள். ஒரு மாநிலத்தில் பிரச்சினை என வந்தால் ஆட்சி கலையும் பட்சத்தில் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த முடியுமா?. தேர்தல் அமைப்பு முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என சொல்கிறார்கள்.
இந்தியாவில் பயன்படுத்தும் வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரிக்கும் ஜப்பான் நாடு, வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தலை நடத்துகிறது. உலகத்தில் இந்தியா மற்றும் நைஜீரியாவில் மட்டும்தான் எந்திரத்தை நம்பி வாக்குப்பதிவு நடக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் போல் தமிழகத்திலும் கவர்னரால் சட்டமன்றம் முடக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி சொல்வது அவருக்கான ஆசை. தமிழகத்தில் பெரும்பான்மையுடன் நடக்கும் ஆட்சியை கலைக்க எந்த முகாந்திரமும் இல்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது 6 மாதத்தில் ஆட்சி மாறும் என்று சொன்னதை போல, இப்போது எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.
ஆர்.கே. நகரில் ரூ.80 கோடி வரை பணம் கொடுத்தார்கள் என சொல்லி தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தலை நடத்தியபோது புகாருக்கு உள்ளானவரே தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை என சட்டம் கொண்டு வரவேண்டும்.
மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என சொல்கிறார்கள். ஆனால் மத அடையாளங்களுடன் நாடாளுமன்றத்திற்கு செல்வது என்ன நியாயம்?
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story