ஆளுங்கட்சி தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் சட்டசபையை முடக்கும் சூழ்நிலை ஏற்படலாம்


ஆளுங்கட்சி தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் சட்டசபையை முடக்கும் சூழ்நிலை ஏற்படலாம்
x
தினத்தந்தி 14 Feb 2022 5:28 AM IST (Updated: 14 Feb 2022 5:28 AM IST)
t-max-icont-min-icon

ஆளுங்கட்சி தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் சட்டசபையை முடக்கும் சூழ்நிலை ஏற்படலாம் என்று ஓமலூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் நேற்று 3-வது நாளாக அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அது நடுநிலையோடு செயல்பட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது. மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். மக்கள் அளித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்தியது. ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைக்கூலியாக மாறிவிட்டது. பல இடங்களில் எதிர்க்கட்சியினருக்கு பாதகமாக செயல்படுகிறது. அதனால் தான் கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடுநிலையோடு நேர்மையுடன் நடத்துவோம் என தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் உறுதியளித்துள்ளது. இதனால் நேர்மையாக நடத்தவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்புக்கு தேர்தல் ஆணையம் ஆளாக நேரிடும். எனவே, தேர்தல் அலுவலர்கள் நேர்மையாக நடுநிலையோடு முறையாக செயல்பட வேண்டும். இனியும் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் செயல்பட்டால் அதனை அ.தி.மு.க. சட்டரீதியாக சந்திக்கும்.

அ.தி.மு.க.வை எதிர்க்க தெம்பும், திராணியும் தி.மு.க.வுக்கு இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்க வரவில்லை. மக்களை சந்திக்க தெம்பு, திராணி இன்றி தி.மு.க.வினர் முறைகேட்டில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி மீண்டும் வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். முறைகேடு இன்றி நேர்வழியில் தி.மு.க. ஜெயித்ததாக சரித்திரம் இல்லை.

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை முடக்கி அந்த மாநிலத்தின் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தை ஆளுகின்ற தி.மு.க. முறைகேட்டில் ஈடுபட்டால் இங்கேயும் சட்டமன்றத்தை முடக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம். தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என நினைக்கும் தி.மு.க.வின் மக்கள் விரோத போக்கை அ.தி.மு.க. வேடிக்கை பார்க்காது. ஆளுங்கட்சியின் எந்த அடக்கு முறைக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதையடுத்து மேட்டூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் அ.தி. மு.க.வுக்கு சாதமான சூழ்நிலை அமைந்துள்ளது. எனவே, அ.தி.மு.க ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story