உள்ளாட்சி அமைப்புகளில் பா.ம.க. அதிகாரம் பெறவேண்டும் - வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை தாருங்கள், முன்னேற்றத்தை தருகிறோம். உள்ளாட்சி அமைப்புகளில் பா.ம.க. அதிகாரம் பெறவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சென்னை,
சென்னையில் நடந்த பா.ம.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
55 ஆண்டுகளாக தமிழகத்தில் தேக்கநிலையே நிலவுகிறது. மக்களிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இதுவரை வெறும் வசனங்களைத்தான் பேசுகின்றனவே தவிர, மக்கள் முன்னேற்றத்துக்காக எதுவுமே செய்யவில்லை.
உலகின் பல நாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்குள்ள முன்னேற்றத்தை, மக்களின் வாழ்க்கைத் தரத்தை தமிழகத்தில் கொண்டுவர ஆசை உண்டு. சென்னை நகரை மேம்படுத்த நிறைய திட்டங்களும் இருக்கின்றன. ஆனால் வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்.
சென்னையை பெருவெள்ளங்கள் தாக்கும் என பல வருடங்களுக்கு முன்பே நாங்கள் எச்சரித்தோம். நடந்ததா, இல்லையா? இதெல்லாம் வெறும் டிரெய்லர்தான். இன்னும் பெரிய வெள்ளங்கள் சென்னையை தாக்கும். எனவே சென்னை நகரின் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் பா.ம.க. அதிகாரம் பெறவேண்டும்.
மக்கள் விரும்பும் மாற்றத்தை பா.ம.க. மட்டுமே கொண்டுவர முடியும். மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் குறைசொல்லி வருகின்றன. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரத்தை ஆளும் அரசுகள் தருவது கிடையாது. ஆனால் பா.ம.க. அந்த அதிகாரத்தை வழங்கும். வெறும் டம்மியாக, முதல்-அமைச்சர் சொல்வதை மட்டும் கேட்கும் மேயராக இதுவரை இருந்து வந்த நிலை மாறும்.
மாம்பழம் சின்னத்தில் வாக்களித்தால் மக்களின் தலையெழுத்து மாறும். மாற்றத்தை நீங்கள் தாருங்கள். முன்னேற்றத்தை நாங்கள் தருகிறோம்.
தற்போது ‘நீட்' தேர்வில் பெரும் அரசியல் நடந்து வருகிறது. விவாதத்துக்கு வரத் தயாரா என 2 திராவிட கட்சிகளும் ஒன்றுக்கொன்று கேள்வி எழுப்பி வருகின்றன. நான் கேட்கிறேன், ‘நீட்' தேர்வின் உண்மைநிலை குறித்து என்னுடன் விவாதிக்க தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தயாரா? அதேபோல ‘டாஸ்மாக்' கடைகள் குறித்தும், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருக்கிறீர்களா? மதுவிலக்குதான் பா.ம.க.வின் கொள்கை. அதேபோல ‘நீட்' தேர்வு தேவையில்லை என்பதுதான் எங்களின் ஒரே நிலைப்பாடு.
அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் அடித்தளமாகும். எனவே பா.ம.க. வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story