பிப்.17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தடை..!
பிப்.17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என்று தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும்19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ம் தேதி நடைபெற உள்ளதால் வரும் 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வரும் வியாழக்கிழமை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், “தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.
அதன்படி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story