புதுச்சேரியில் காதலர் தின கொண்டாட்டம் போலீசார் கெடுபிடியால் ஏமாற்றம்
புதுவையில் காதலர் தினத்தை கொண்டாடிய ஜோடிகளிடம் போலீசார் கெடுபிடியாக நடந்து கொண்டனர்.
புதுச்சேரி
புதுவையில் காதலர் தினத்தை கொண்டாடிய ஜோடிகளிடம் போலீசார் கெடுபிடியாக நடந்து கொண்டனர்.
காதலர் தினம்
பிப்ரவரி 14-ந் தேதியான இன்று உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. புதுவையில் காதலர் தினத்தை கொண்டாட காதல் ஜோடிகள், இளம் தம்பதியினர் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
காலை முதலே கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் காதலர்கள் கூடினார்கள். மேலும் ஓட்டல்களிலும் தங்களது கொண்டாட்டத்தை தொடர்ந்தனர்.
பூங்கொத்து
புதுவை கடற்கரையில் காதலர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக வெளிமாநிலத்தை சேர்ந்த காதலர்கள் நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடிந்தது.
தங்கள் அன்பை வெளிக்காட்டும் வகையில் காதல் ஜோடிகள் ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை பரிமாறிக்கொண்டனர். காதலுக்கு அடையாளமாக ரோஜா பூக்கள் காதலன் காதலியிடம் வழங்கியதை பார்க்க முடிந்தது. சில ஜோடிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
புதுவை பாரதி பூங்காவுக்கு வந்திருந்த காதல் ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
போலீசார் கெடுபிடி
காதலர் தினத்தையொட்டி பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் சுற்றுலா தலங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள், ஜோடி ஜோடியாக வந்தவர்களிடம் விசாரித்தனர். சிலரிடம் அவர்களது பெற்றோர், சொந்த ஊர் குறித்த விவரங்களையும் கேட்டு தெரிந்துகொண்டனர்.
ஒருசில காதல் ஜோடிகள் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தனர். அவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்தனர். பூங்காக்களில் அத்துமீறி நடந்து கொண்ட காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
ஏமாற்றம்
போலீசாரின் கெடுபிடி காரணமாக பல காதல் ஜோடிகள் கடற்கரை பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் பாறைகளின் மீது அமர்ந்து அலைகளை ரசித்தனர்.
நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான சூழ்நிலை நிலவியதால் கடற்கரையில் மதிய நேரத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து பொழுதுபோக்கினர்.
சில காதலர்கள் தியேட்டர்கள், மாலுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடினர்.
Related Tags :
Next Story