புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த போது கடல் அலையில் சிக்கி தத்தளித்த கல்லூரி மாணவர்கள் காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு குவிகிறது
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடலில் குளித்த போது அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்களை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு குவிகிறது.
புதுச்சேரி
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடலில் குளித்த போது அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்களை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு குவிகிறது.
கல்லூரி மாணவர்கள்
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 22). இவரது நண்பர் சபரிஷ் (24). கல்லூரி மாணவர்களான இவர்கள் 2 பேரும் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். இங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.
இந்தநிலையில் இன்று காலை தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் திட்டுக்கு சென்றனர். கடலை பார்த்ததும் குளிக்க ஆசைப்பட்டு மாணவர்கள் 2 பேரும் கடலில் இறங்கினர்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கினர். கண் இமைக்கும் நேரத்தில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் உதவி கேட்டு அபய குரல் எழுப்பினர். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்களும் கூச்சலிட்டனர்.
கடலில் குதித்து மீட்பு
அப்போது சத்தம் கேட்டு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கடலோர காவல்படை போலீஸ்காரர் சவுந்தரராஜன் விரைந்து வந்தார். விபரீதத்தை புரிந்து கொண்டு உடனடியாக கடலில் குதித்து மாணவர்கள் 2 பேரையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
மீட்கப்பட்டவர்களின் ஒருவரான விஷ்ணு கடல் தண்ணீரை அதிகமாக குடித்ததால் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு போலீஸ்காரர் சவுந்தரராஜன் முதலுதவி செய்தார்.
அதன்பின் அங்கிருந்தவர்கள் உதவியுடன் மாணவர்கள் இருவரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் பரிந்துரையின்படி மாணவர்கள் நலமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறிவுரைகூறி அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
குவியும் பாராட்டு
கடலில் குளித்த போது அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்களை பத்திரமாக மீட்ட போலீஸ்காரருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். சமூகவலைதளத்திலும் வைரலாகி பாராட்டு குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story