தேசிய கல்விக்கொள்கை தொலைநோக்கு பார்வை கொண்டது: வெங்கையா நாயுடு


தேசிய கல்விக்கொள்கை தொலைநோக்கு பார்வை கொண்டது: வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 15 Feb 2022 2:46 AM IST (Updated: 15 Feb 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கல்விக்கொள்கை தொலைநோக்கு பார்வை கொண்டது என்று சென்னையில் நடந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.

விளையாட்டு மைய கட்டிடம்

சென்னை தரமணியில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.டி.டி.டி.ஆர்.) உள்ளது. இந்த நிறுவன வளாகத்தில் விளையாட்டு மைய கட்டிடத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று திறந்து வைத்தார்.

அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.எஸ்.எஸ்.குமார், இயக்குனர் உஷா நடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேசிய கல்விக்கொள்கை

விளையாட்டு மைய கட்டிடத்தை திறந்து வைத்து வெங்கையா நாயுடு பேசியதாவது:-

நமது வகுப்பறைகளில் குறிப்பாக ஊரக இந்தியாவில் ஊக்கப்படுத்துகின்ற மாற்றத்தை ஏற்படுத்துகின்ற தலைவர்கள் நமக்கு தேவை. சிறந்த ஆசிரியர்கள் கல்விச்சூழலை மறு உருவாக்கம் செய்கிறார்கள். மேலும் தேசத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைக்கிறார்கள். தொழில்நுட்ப ஆசிரியர்கள் என்ற முறையில் அதிவேக வளர்ச்சிக்கு தொழில்நுட்ப ஊக்கத்தை தரவேண்டும். ‘தேசிய கல்விக்கொள்கை 2020' என்பது தொலைநோக்கு பார்வை கொண்ட ஆவணம். இது நமது நாட்டின் கல்விச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த வகைசெய்கிறது.

ஆசிரியர்கள் புதுவகையான யுக்திகளை கையாள வேண்டும். அறிவுப்பூர்வமான, துடிப்புமிக்க, ஒருங்கிணைந்த சூழலில் தேசிய மற்றும் உலகளாவிய சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் அவர்களின் தொலைநோக்கு பார்வை தீர்வு காண வேண்டும். புதிய கண்டுபிடிப்பு செயல்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும். கள அளவில் மாற்றத்திற்கான தாக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

டிஜிட்டல் பாகுபாடு

கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக்கழகங்களையும், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கும் தேவையை தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. சிறப்புடன் கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் மூலம் தலைசிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதில் என்.ஐ.டி.டி.டி.ஆர். சென்னை முன்னணியில் இருக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் கற்றலை மேம்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் நிலையில், டிஜிட்டல் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும். இதனை அடைவதற்கு இணையதள வசதி கிடைப்பதை அதிகரிப்பது, குறிப்பாக ஊரகப்பகுதிகளிலும், தொலைத்தூரப்பகுதிகளிலும் அதிகரிப்பது அவசியமாகும்.

கொரோனா முன்கள பணியாளர்களாக செயல்பட்டதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு தங்களால் இயன்ற அளவுக்கு பணியாற்றியதற்காக ஆசிரியர்களை பாராட்டுகிறேன். ‘ஸ்வயம்'-ஆசிரியர் பயிற்சி திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் மகுடத்தில் மேலும் ஒரு சிறப்பாக அமைவதோடு, மிகுந்த பாராட்டுதலுக்கும் உரியதாகும்.

சமுதாயத்தின் மையப்புள்ளி

முழுமையான கற்றல் மற்றும் தனிநபர் வளர்ச்சியை மேம்படுத்த, தூய்மை, பசுமைமயமாக்கல் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றின் முக்கியத்துவத்தில் உள்ள கற்றல் இடைவெளியை அகற்றவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும். உடல் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதாகவும் இருப்பதற்கு உடல்தகுதி அவசியம் என்பதை பெருந்தொற்று பாதிப்பு மீண்டும் நமக்கு உணர்த்தி உள்ளது. விளையாட்டு அல்லது யோகா பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ளுமாறு மாணவர்களை, ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

ஆசிரியர்கள்தான் இந்திய சமுதாயத்தின் மையப்புள்ளியாக திகழ்கின்றனர். உயர்ந்தபட்ச மனித பாரம்பரியத்தில், ஆசிரியர்கள் புனிதமானவர்களாக போற்றப்படுகின்றனர். இந்த சித்தாந்தத்துக்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேசிய உறுதிப்பாட்டுக்கு ஏற்ப பணியாற்றவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story