தமிழகத்தில் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது - வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்
தமிழகத்தில் சதுப்பு நிலங்களில் நீர்மட்ட அளவு உயர்ந்ததால் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக வனத்துறை கணக்கெடுப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பறவைகளின் இனங்கள் மற்றும் எண்ணிக்கை குறித்து வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. கடலோர பகுதிகளில் உள்ள பறவைகள் மற்றும் புலம் பெயர்ந்து வரும் பறவைகள் பற்றிய முதல் கட்ட கணக்கெடுப்பு கடந்த மாத இறுதியில் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நிரஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தின் அனைத்து வகை பறவைகளின் 2-ம் கட்ட ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 12 மற்றும் 13-ந்தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படுள்ளது. இதில் 45 சமூக அமைப்புகள், என்.ஜி.ஓ.க்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
25 மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் முக்கியப்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தபட்டது. சென்னை அருகே வேடந்தாங்கல் உள்ளிட்ட 14 உள்ளூர் நீர்ப்பறவைகள் சரணாலயங்கள் இதில் அடங்கும். சேலத்தில் 97 சதுப்பு நிலப்பகுதிகளிலும், சென்னையில் 28 இடங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடலோர பகுதிகளில் நடந்த முதல் கட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 100 இனங்களைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பறவைகள் காணப்பட்டன. இந்த ஆண்டு பெய்த மழையினால், புலம் பெயர்ந்து வரும் பறவைகளில் பல பறவைகள் வழக்கமாக வரும் இடங்களுக்கு வராமல் வேறு சதுப்பு நிலங்களை நோக்கி சென்றுவிட்டன. பெலிக்கன், கரண்டிவாயன் உள்ளிட்ட சில அபாயத்தை எதிர்கொள்ளும் கொக்கு இனங்கள், ஆயிரக்கணக்கான கூடுகளுடன் காணப்பட்டன. சில வகை கொக்குகள், நீர்நிலைகளிலும் குறிப்பாக நெல் வயல்களிலும் காணப்படுகின்றன. அவை வேடந்தாங்கல், கூந்தன்குளம், தீர்த்தங்கல், மேலச்செல்வனூர், கீழசெல்வனூர் ஆகிய இடங்களில் அவை அதிகம் உள்ளன.
நீர்நிலை பகுதிகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை, மற்ற மாவட்டங்களை காட்டிலும் நெல்லை மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. அங்கு 41 நீர்ப்பறவைகள் இனம் காணப்படுகிறது. 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலை பறவைகள் அங்கு உள்ளன. கூந்தன்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் உள்ளன.
அங்கு ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரம் பெரிய உருவம் கொண்ட பிளமிங்கோ பறவைகள் வருவது வழக்கம். ஆனால் அதிக நீர்மட்ட உயர்வினால் 150-க்கும் குறைவான பிளமிங்கோ பறவைகள் அங்கு காணப்படுகின்றன. அஒட்டுமொத்தமாக பார்த்தால், பல்வேறு சதுப்பு நிலங்களில் நீர்மட்ட அளவு உயர்ந்திருப்பதால் தற்போது நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story