திம்பம் மலைப்பாதை வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்; சென்னை ஐகோர்ட்டு
திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டு இந்த மலைப்பாதை உள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த மலைப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை செல்கிறது. வனப்பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இந்த மலைப்பாதையை கடந்து செல்வது வழக்கம். அப்போது திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் இறக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்க பண்ணாரி-திம்பம் வனச்சாலையில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்து கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் வெளியிட்ட உத்தரவை பிப்ரவரி 10-ந் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கடந்த 10ந்தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இந்த தடையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், உத்தரவை பரிசீலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் முன்னாள் எம்.எல்.ஏ., பி.எல். சுந்தரம் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற முடியாது
சரணாலயத்தில் உள்ள கிராமங்களை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். அல்லது சரணாலயம் என அறிவிக்க வேண்டும். திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமுடன் தெரிவித்து உள்ளது.
இந்த வழக்கில், சுந்தரம் பதிலளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கை ஒரு வாரத்திற்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.
Related Tags :
Next Story