வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்ட ரத்து விவகாரம்: மேல்முறையீட்டு மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா?
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்துசெய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம் நடைபெற்றது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்துசெய்த சென்னை ஐகோர்ட்டின் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தமிழக சட்டத்துறை, தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் வக்கீல் டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.
அதேபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, சமூக நீதி பேரவையின் தலைவர் வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இறுதி விசாரணை
இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்துசெய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும்.
இது அரசின் கோரிக்கையாக இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் வலியுறுத்துகிறேன் என விளக்கம் அளித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மூத்த வக்கீல் ராகேஷ் துவிவேதி, அரசியலமைப்பு சாசன 102, 105-வது பிரிவுகள் திருத்தம் இந்த வழக்கில் தொடர்புடையதால் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்கலாம் என வாதிட்டார்.
தமிழக அரசின் உயர்கல்வித் துறை சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடுகையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்துக்கும், 102, 105-ஆவது அரசியலமைப்பு சாசன திருத்த சட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை. இதே அமர்வு விசாரிக்கலாம் என்றார்.
பா.ம.க. கருத்து
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்றார்.
பா.ம.க. சார்பில் வக்கீல் எம்.என்.ராவும், அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சார்பில் ஆஜரான வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அதே கருத்தை முன்வைத்தனர்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக இருந்தால், 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த இடைக்கால அனுமதி வேண்டும் என வாதிட்டார்.
எதிர்பார்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளையும் நடைபெறும் என தெரிவித்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா அல்லது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Related Tags :
Next Story