மாசித்திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்


மாசித்திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2022 5:58 AM IST (Updated: 16 Feb 2022 5:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்கபெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தியபின் 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றடைந்தனர்.

நேற்று இரவு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்று வருகிறது.

காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி ரத வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் குவிந்து உள்ளனர்.

11-ம் திருநாளான நாளை (வியாழக்கிழமை) மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறுகிறது.

பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளி வீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு இரவு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலையில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வருகிறார்கள். இரவு சுவாமியும், அம்பாளும் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

Next Story