ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவ அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழுவில் மாற்றம் - வீடியோ
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட விசாரணைக்குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.
சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணை முடிவடையாத நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவ 8 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவக்குழு தற்போது 6 பேர் கொண்ட குழுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முந்தைய குழுவில் 8 பேர் இருந்த நிலையில் தற்போதைய குழுவில் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழு மாற்றியமைக்கப்பட்டது தொடர்பான கடிதத்தை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் இயக்குனர் அனுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story