புதுச்சேரி கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி


புதுச்சேரி கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி
x
தினத்தந்தி 16 Feb 2022 9:53 PM IST (Updated: 16 Feb 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

புதுவை வைத்திக்குப்பத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுவை வைத்திக்குப்பத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாசிமகம்
மாசிமகத்தையொட்டி புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடற்கரைகளில் தீர்த்தவாரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தீர்த்தவாரி சிறப்பாக நடந்தது.
இதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் நேற்று முதலே புதுவைக்கு கொண்டுவரப்பட்டனர்.
இ்ன்று காலையில் வைத்திக்குப்பம் கடற்கரைக்கு மேளதாளம் முழங்க உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர். அங்கு கடற்கரையில் தீர்த்தவாரியுடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 
தீர்த்தவாரி
மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி, திண்டிவனம் நல்லியகோடான் நகர் அலர்மேல் மங்கா சமேதா சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், ராமகிருஷ்ணாநகர் லட்சுமி ஹயக்கிரீவர், பிள்ளைச்சாவடி சாய்பாபா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவர்கள் கடலில் தீர்த்தவாரி முடித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீர்த்தவாரியை முன்னிட்டு புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடி சாமி தரிசனம் செய்தனர். இதற்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர்.
தீவிர கண்காணிப்பு
தீர்த்தவாரிக்கு வந்த பக்தர்கள் பலர் சாமிதரிசனம் செய்துவிட்டு கடலில் புனிதநீராடினர். அவர்கள் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றுவிடாதவாறு போலீசார் எச்சரிக்கை செய்தபடி இருந்தனர்.
மேலும் யாராவது கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டால் அவர்களை காப்பாற்றும் விதமாக கடலோர காவல்படையினர் கடல் பகுதியில் ரோந்து வந்தனர். 
கூட்டத்தில் பக்தர்களிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதை தவிர்க்க, போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அங்கிருந்து பைனாகுலர் மூலம் கூட்டத்தினரை கண்காணித்தனர். டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது.
அன்னதானம்
மாசி மகத்துக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு நகரமெங்கும் பல்வேறு அமைப்புகள், பிரமுகர்கள் சார்பில் வடை, பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பல இடங்களில் நீர்மோர் பந்தல்களும் திறக்கப்பட்டிருந்தன.
தீர்த்தவாரி முடிந்து உற்சவமூர்த்திகள் தங்களது சொந்த கோவில்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அதேநேரத்தில் மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் அலர்மேல் மங்கா சமேத சீனிவாச பெருமாள் ஆகியோர் ஓரிரு நாட்கள் புதுச்சேரியில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.
மாசிமக தீர்த்தவாரியில் சாமி தரிசனம் செய்வதற்காக புதுவை மற்றும் தமிழக பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தததால் நகர பகுதியில் நெரிசல் காணப்பட்டது.
வீராம்பட்டினம்
அரியாங்குப்பத்தை அடுத்துள்ள வீராம்பட்டினத்தில் மாசிமக கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து 33 உற்சவமூர்த்திகள் கலந்துகொண்டன. முன்னதாக வீராம்பட்டினம் தெப்பக்குளத்தில் இருந்து உற்சவ மூர்த்திகளை மாசி மக மக்கள் பாதுகாப்பு குழு மற்றும் அறங்காவல் குழு சார்பில் பாஸ்கர் எம்.எல்.ஏ. வரவேற்றார்.  
பெரிய காலாப்பட்டு
இதேபோல் பெரிய காலாப்பட்டு கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் மட்டுமின்றி வானூர், மரக்காணம் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்தும் உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக வந்து கடற்கரையில் எழுந்தருளியது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து மாசிமக தீர்த்தவாரி நடந்தது. விழாவில் சுற்றுப்புற கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாசிமக திருவிழாவையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே உள்ள குமராபாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் குமராபாளையம், கொடாத்தூர் - மணவெளி, சோம்பட்டு, தி.புதுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் பங்கேற்றன. இதில் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story