புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற வழக்கில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 6 பேர் கைது ரூ.2 லட்சம் பறிமுதல்
புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற வழக்கில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
கஞ்சா பொட்டலம்
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கடந்த 13-ந் தேதி இரவில் ரோந்து பணியில் இருந்த போது புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே தங்கும் விடுதியில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு கஞ்சா வாசனை வந்துள்ளது. அந்த இடத்தின் அருகே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த கார்த்திக் (வயது 22) என்பவரை பிடித்து டவுன் போலீசார் விசாரித்தனர். இதில் அவர் புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் அப்துல் மஜீத் (33) என்பவரிடம் கஞ்சா பொட்டலம் வாங்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரை மீண்டும் தொடர்பு கொண்டு கஞ்சா பொட்டலம் கேட்கும் படி கார்த்திக்கிடம் போலீசார் கூறினர். அவர் அப்துல் மஜீத்தை தொடர்பு கொண்டு பேசி கஞ்சா கேட்ட போது முரளி (36) என்பவரிடம் கொடுத்து அனுப்பினார். கார்த்திக்கிடம் முரளி கஞ்சா பொட்டலத்தை கொடுக்கும் போது போலீசார் மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
அதன் பின்னர் அப்துல் மஜீத் வீட்டிற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அவரது வீட்டில் 5 கிராம் எடையில் கஞ்சா பொட்டலங்கள் மொத்தம் 40 எண்ணிக்கையில் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அப்துல் மஜீத்தை கைது செய்தனர். இவர் புதுக்கோட்டை நகராட்சியில் 23-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கஞ்சாவை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா வியாபாரிகளிடம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வத்தலக்குண்டு சென்ற போலீசார் அங்கு கஞ்சா வியாபாரிகளான சர்மா (20), நரேந்திரகுமார் (27), கதிர்வேல் (34), மியாகனி (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 8 கிலோ 394 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 700 ரொக்கம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள், 2 தராசுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
பரபரப்பு
கஞ்சாவை வத்தலகுண்டுவில் இருந்து வாங்கி வந்து புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விற்பனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கைதான 6 பேரையும் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் அழைத்து வந்தனர். கைதான 6 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story