முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சி.எஸ்.ஐ. பேராயர்கள் சந்திப்பு - தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சி.எஸ்.ஐ. பேராயர்கள் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் நேரில் சந்தித்து வருவதோடு, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பேராயர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் தென்னிந்திய திருச்சபைகள் செயலாளர் சி.பெர்னான்ட்ஸ் ரெத்தினராஜா, சி.எஸ்.ஐ. மதுரை பேராயர் ஜோசப், கோவை பேராயர் தீமோத்தேயு, சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன், திருநெல்வேலி பேராயர் பர்ணபாஸ், வேலூர் பேராயர் சர்மா நித்தியானந்தா, சென்னை பேராய செயலர் மேனியல் டைட்டஸ், பிசப் சேப்ளின் ஏனஸ், சென்னை பேராயர்கள் இம்மானுவேல் தேவகடாட்சம், பால் தயாநிதி, பாதிரியார் கிறிஸ்டோபர், எபி.எர்னஸ்ட், பார்த்தீபன் செனாட், சி.என்.ஐ. பொது செயலாளர் தயாநிதி, பொருளாளர் ஹேமில்டன் வெல்சர் ஆகியோர் இருந்தனர்.
சந்திப்பின் போது தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் சி.எஸ்.ஐ. பேராயர்கள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். இதில் தி.மு.க. செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக தென்னிந்திய திருச்சபைகள் செயலாளர் சி.பெர்னான்டஸ் ரெத்தினராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘நிச்சயமாக நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலிலே சமூகநீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற இந்த தமிழகம், தி.மு.க. தலைமையிலே போட்டியிடக்கூடிய அனைத்து வேட்பாளர்களும் நிறைவான வெற்றியை பெறுவார்கள் என்ற எங்களுடைய எண்ணத்தையும், ஆதரவையும் தெரிவித்திருக்கிறோம். அவ்வாறு நாங்கள் தெரிவித்த போது முதல்-அமைச்சரும் மகிழ்ந்தார். முதல்-அமைச்சருடைய கடுமையான உழைப்பிலே இன்றைக்கு சமூகநீதி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையிலே யாரும் தமிழகத்தை மதரீதியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அது தமிழகத்திலே நடைபெறாது' என்றார்.
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தினர் சந்தித்து பேசினர்.
இந்த மாமன்றத்தின் பிரதம பேராயர் சார்லஸ் பின்னி ஜோசப், தலைவர் டேவிட் பிரகாசம் மற்றும் பல நிர்வாகிகள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க பொதுச்செயலாளர் பால் தயாநிதி, துணைச்செயலாளர் ஜோசுவா ஜான், அட்வென்ட் திருச்சபைகளின் பேராயர் பகத்சிங், பேராயர் பால் அருள்தாஸ், செயலாளர் பால் தினகரன் உள்பட பலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு ஆதரவு அளித்தனர்.
Related Tags :
Next Story