பாசப்போராட்ட காட்சிகளும் அரங்கேறின: 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து, மழலை செல்வங்கள் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் தங்கள் வகுப்புகளுக்கு வந்தனர்.
சென்னை,
உலகத்தையே அச்சுறுத்தி வாட்டி வதைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் முதல் முறையாக கேரள மாணவிக்கு 2020-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர், சீனாவின் உகான் மாகாணத்தில் மருத்துவம் படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுக்க தொடங்கியது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவலை கடந்த 2020 மார்ச் 14-ந் தேதி தேசிய பேரிடராக இந்தியா அறிவித்தது. அதைத்தொடர்ந்து 2020 மார்ச் 16-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மார்ச் 17-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டது. (அன்று முதல் நேற்று முன்தினம் வரை நர்சரி பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
பின்னர், 2020 மார்ச் 22-ந் தேதி, முதன்முதலாக 14 மணி நேர தன்னார்வ பொது ஊரடங்கு பிரதமர் நரேந்திரமோடியால் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அன்று முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வந்தது. பின்னர், கொரோனா தொற்று பரவல் குறைய, குறைய பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில், நர்சரி பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் 16-ந் தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நர்சரி மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் வரை சுமார் 2 ஆண்டுகளாக வீடுகளில் முடங்கி கிடந்த மழலைச்செல்வங்கள் தாங்கள் பள்ளிக்கு செல்வதை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று புத்தாடை சகிதம் புத்தகப்பையுடன் பள்ளிக்கு மிகவும் ஆர்வமாக மழலை செல்வங்கள் வந்தன.
பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மழலைகளை ஆசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்கள் பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பு முத்தம் அளித்தும், பாசமாக பருகுவதற்கு தண்ணீர் கொடுத்தும், முகத்தில் முககவசத்தை ஒழுங்காக அணிவித்தும் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், பள்ளிக்கு எப்போது செல்வோம் என்று காத்திருந்த மழலைகள் பெற்றோருடன் உற்சாகமாக பள்ளிக்கு வந்த போதிலும், அதில் பல குழந்தைகள் பள்ளியின் வாசலில் இருந்து வகுப்புக்கு செல்ல மறுத்து அழத்தொடங்கின. அந்த குழந்தைகளை பெற்றோர் சமாதானப்படுத்தி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே பல்வேறு சுவையான பாசப்போராட்ட காட்சிகள் அரங்கேறின.
பல மழலைகள் வகுப்பறையிலும் தங்களின் அழுகையை நிறுத்தாமல் அழுததையும் பார்க்க முடிந்தது. அவர்களை வகுப்பு ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கியும், பல்வேறு சமாதானங்களை தெரிவித்தும் அழுகையை நிறுத்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளியில் மழலைச்செல்வங்களை பார்ப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நர்சரி பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஒருவழியாக, சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு வீடுகளில் முடங்கிக் கிடந்த மழலைச்செல்வங்கள் பள்ளிக்கு சென்றது பெற்றோர் - குழந்தைகள் மட்டும் அல்லாமல் நர்சரி பள்ளி ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை வழங்கியது என்று கூறினால் அது மிகையாகாது.
Related Tags :
Next Story