நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கத்தடை - சென்னை ஐகோர்ட்டு
நடிகர் விஜய்சேதுபதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டையை கோர்ட்டில், மகாகாந்தி என்பவர் நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பெங்களூர் செல்லும்போது விமானத்தில் நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்து அவர் செய்து வரும் சாதனையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன். அதை ஏற்க மறுத்த அவர், என்னையும் என் சாதியையும் இழிவாக பேசினார் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பினார். இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய்சேதுபதி சார்பில் ஆஜரான வக்கீல் நர்மதா சம்பத், "பெங்களூரில் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு விசாரிக்க முடியாது. கோர்ட்டுக்கு அதிகாரமே கிடையாது. எந்திரத்தனமாக இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார். சட்டத்தை மகாகாந்தி தவறாக பயன்படுத்தியுள்ளார். பெங்களூர் போலீசில் ஒன்றும் நடக்கவில்லை என்று எழுதி கொடுத்து விட்டு, அதை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
மகாகாந்தி சார்பில் ஆஜரான வக்கீல், "சம்பவம் பெங்களூரில் நடந்தாலும், உடல் காயம் குறித்து சென்னையில் மகாகாந்தி சிகிச்சை பெற்றுள்ளார். அதனால் இங்கு வழக்கு தொடர முடியும்" என்று வாதிட்டார். அப்போது, "பெங்களூரு போலீசில் ஒன்றும் நடக்கவில்லை என்று புகார்தாரர் எழுதி கொடுத்தாரா?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு வக்கீல், "பெங்களூரு போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்தது. அதனால் அவ்வாறு எழுதி கொடுக்கப்பட்டது" என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, "கட்டப்பஞ்சாயத்து நடந்திருந்தால், அதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தீர்களா?"என்று கேட்டார். அதற்கு வக்கீல், புகார் கொடுக்க வில்லை என்றார்.
இதையடுத்து, விஜய் சேதுபதி மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த மனு மீதான இறுதி விசாரணைக்காக வருகிற மார்ச் 3-ந்தேதிக்கு விசாரணையை தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story