திருக்காஞ்சியில் மாசிமக தீர்த்தவாரி
திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் 50-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் பங்கேற்றன. முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் 50-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் பங்கேற்றன. முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாசிமக பிரம்மோற்சவம்
வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையின் தென்கரையில் ஸ்ரீ காமாட்சி மீனாட்சி சமேத கங்கைவராக நதீஸ்வரர் கோவில் மற்றும் வடக்கு கரையில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த திருத்தலங்களில் ஆண்டுதோறும் மாசி மக நட்சத்திரம் அன்று தீர்த்தவாரி வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இரவு சாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தீர்த்தவாரி
விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மாசிமக தீர்த்தவாரி இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள சங்கராபரணி நதிக்கரையில் புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளின. தொடர்ந்து சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
மேலும் பித்ரு தோஷம் நீங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தீர்த்தவாரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு தரிசித்தனர்.
அன்னதானம்
மாசி மகத்தையொட்டி பல்வேறு தரப்பினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலின் வடக்கு கோபுரம் அருகே ஆச்சாரியா கல்வி குழுமம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மேற்கு கோபுர வாயிலில் பா.ஜ.க. நிர்வாகி கண்ணபிரான் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேற்கு மாவட்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற அன்னதானத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சங்கராபரணி ஆற்றங்கரையில் மங்கலம் தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
காசிவிசுவநாதர் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அறங்காவலர் குழு தலைவர் கார்த்திக் முன்னிலையில் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் கடற்கரையில் இன்று மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திருவேட்டக்குடி திருமேனி அழகர் கோவில், வரிச்சிக்குடி வரதராஜப்பெருமாள் கோவில், மேலகாசாகுடி வரதராஜப்பெருமாள், வரசித்தி விநாயகர் ஆகிய நான்கு கோவில்களில் இருந்து சிவன்-பார்வதி, பெருமாள், திருமேனியழகர், முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர், அர்ச்சுனன், அம்பாள், வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட 12 உற்சவ மூர்த்திகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக மண்டபத்தூர் கடற்கரைக்கு சென்றது. பின்னர் 12 சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கடலில் தீர்த்தவாரி நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா, முன்னாள் எம்.எல்.ஏ ஓமலிங்கம் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடல்நீரை தலையில் வாரி இறைத்து சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரியில் தலத்தெரு பொன்னம்மா காளியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து கடலில் தீர்த்தவாரி நடபெற்றது.
Related Tags :
Next Story