அரிமளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு; காளை முட்டி வாலிபர் பலி


அரிமளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு; காளை முட்டி வாலிபர் பலி
x
தினத்தந்தி 18 Feb 2022 12:30 AM IST (Updated: 18 Feb 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

மாசிமக திருவிழாவையொட்டி அரிமளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் காளை முட்டி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

அரிமளம், 
வடமாடு மஞ்சுவிரட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் போசம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 2 கோவில் மாடுகள் மற்றும் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 வடமாடுகள் கலந்து கொண்டன. 
போட்டியில் ஒவ்வொரு மாடுகளையும் அடக்குவதற்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. 9 பேர் கொண்ட குழுவினர் மாடுகளை அடக்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
வாலிபர் பலி
போட்டியில் 3 மாடுகளை தவிர 9 மாடுகளை வீரர்கள் அடக்கினார்கள். இதில் 6 பேர் லேசான காயம் அடைந்தனர். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் கமிட்டியின் சார்பில் ரூ.5 ஆயிரம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 
இந்தநிலையில், காளை முட்டியதில் நெடுங்குடி ஊராட்சி கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா என்ற சந்துரு (வயது 21) பலத்த காயம் அடைந்தார். இவர் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே கருப்பையா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story