உக்ரைனில் 1000 தமிழர்கள் வசிப்பதாக தகவல்: விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்
உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரம் பேர் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை,
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற நிலை எழுந்ததால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவித்தது. இந்திய தூதரகமும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரம் பேர் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் பலர் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பிற்காக சென்ற மாணவர்கள் , சிலர் வேலைக்காகவும் சென்றவர்கள் ஆவார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் உக்ரைன் நாட்டின் தலைநகர் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக தாயகம் திரும்ப தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தினருக்கு மாநிலங்களவை எம்.பி.யும், தி.மு.க. அயலக அணியின் இணை செயலாளருமான புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் கூறுகையில், மேற்கண்ட தகவல்களை அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து உக்ரைன் சென்றவர்களின் விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அங்குள்ள நிலைமைகள் குறித்து தொடர்ந்து தமிழக அரசு கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story