காரை மடக்கி பிடித்த ஊர்க்காவல் படை பெண் போலீசை கடத்தி சென்று தாக்குதல்


காரை மடக்கி பிடித்த ஊர்க்காவல் படை பெண் போலீசை கடத்தி சென்று தாக்குதல்
x
தினத்தந்தி 19 Feb 2022 11:35 PM IST (Updated: 19 Feb 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை மடக்கி பிடித்த புதுவை ஊர்க்காவல் படை பெண் போலீசை கடத்தி சென்று தாக்குதல் நடத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை மடக்கி பிடித்த புதுவை ஊர்க்காவல் படை பெண் போலீசை கடத்தி சென்று தாக்குதல் நடத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய கார்
புதுவை கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை பெண் போலீசாக பணிபுரிந்து வருபவர் ஜீவிதா (வயது 32). இவர் இன்று காலை தவளக்குப்பம் 4 முனை சந்திப்பு சிக்னலில்  போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் ஒன்று தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது. இதைக்கண்ட ஜீவிதா அங்கிருந்த ஒருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றார். 
கடத்தல்
தவளக்குப்பம் இடையார்பாளையம் அருகே உள்ள என்.ஆர்.நகர் பகுதியில் வைத்து அந்த காரை ஜீவிதா மடக்கி பிடித்தார். பின்னர் கார் டிரைவரிடம் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் காரை கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வருமாறு கூறி காரில் ஏறினார்.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு வந்த போது டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக கடலூர் நோக்கி  ஓட்டி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவிதா காரை நிறுத்துமாறு கூறினார். அதனை அவர் பொருட்படுத்தவில்லை. தன்னை கடத்த முயன்றதை உணர்ந்த ஜீவிதா, காரின் ஸ்டிரியங்கை ஒரு பக்கமாக திருப்பினார். இதனால் பயந்துபோன டிரைவர் பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே காரை சாலையோரமாக நிறுத்தினார்.
சரமாரி தாக்குதல்
இதையடுத்து அவர், பெண் போலீஸ் ஜீவிதாவை சரமாரியதாக தாக்கி கீழே தள்ளிவிட்டு காருடன் தப்பியோடி விட்டார். மேலும் ஜீவிதா வைத்திருந்த வாக்கி டாக்கியையும் பறித்து சென்றார்.
படுகாயங்களுடன் தவித்த ஜீவிதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் இந்த சம்பவம் தொடர்பாக புகார் செய்தார். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன்குமார், ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பட்டப்பகலில் ஊர்க்காவல் பெண் போலீசை தாக்கி விட்டு கார் டிரைவர் தப்பி சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story