காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண் நகை திருடிய வழக்கில் கைது..!
புதுச்சேரியில் நகை திருட்டு வழக்கில் தமிழக பெண் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி நயம்பாடி குளக்கரை தெருவை சேர்ந்தவர் மாதவி (42). இவர் புதுவை தன்வந்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார்.
மாதவி தங்கியுள்ள விடுதியில் அறையில் அவருடன், புதுவையை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் சிவ பிரீத்திகா (21) உள்பட மொத்தம் 4 பேர் உள்ளனர். சிவ பிரீத்திகா, கடந்த மாதம் பெற்றோருடன் கோபித்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் வந்து தங்கினார். இவர் தமிழ்நாடு பெண் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் பயிற்சிக்காக வருகிற 1-ந் தேதி பணியில் சேர உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் மாதவி காலையில் எழுந்து பார்த்த போது தனது பெட்டியில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாதவி உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சிவ பிரீத்திகா மீது போலீசுக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரில் குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்திருந்த 10 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் அவர் அடகு வைத்ததாக கூறிய 2 பவுன் நகைளையும் போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் சிவ பிரீத்திகாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு பெண்கள் சிறையில் அடைத்தனர்.
புகார் அளித்து சில மணி நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுடித்து, நகையை மீட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பாராட்டினார்.
Related Tags :
Next Story