தலைமை செயலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் முற்றுகையிட முயற்சி


தலைமை செயலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 21 Feb 2022 11:46 PM IST (Updated: 21 Feb 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற சுகாதாரத்துறை ஊழியர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற சுகாதாரத்துறை ஊழியர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் போராட்டம்
புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு சார்பில் கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் அளித்த வாக்குறுதியின்படி ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், சுகாதாரத் துறையில் காலியாக உள்ள இடங்களை, 10 ஆண்டு பணி முடித்த சுகாதார இயக்க ஊழியர்களை தகுதி அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 18-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சுகாதார துறை இயக்குனர் அலுவலகம் முன்பு இன்று 3-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மத்திய கூட்டமைப்பு தலைவர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் லட்சுமணசாமி கண்டன உரை ஆற்றினார். இதில் சுகாதார ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தலைமை செயலகம் நோக்கி...
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று அங்கிருந்து புறப்பட்டு தலைமை செயலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். தலைமை செயலகம் அருகே பெரியகடை போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை மட்டும் தலைமை செயலகத்துக்கு செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். தலைமை செயலர் அஸ்வனிகுமாரை, சுகாதாரத்துறையை சேர்ந்த மூத்த ஊழியர்கள் சிலர் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். 
நாளை பேச்சுவார்த்தை
அப்போது ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் நாளை  (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று சுகாதாரத்துறை ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
இதேபோல் என்.எச்.எம். ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் சாராமல் சம்பளம் உயர்வை வலியுறுத்தி சுகாதாரத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திலகவதி, சுந்தரராமன், பாலமுருகன், சர்மிளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story