தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கச்சத்தீவு ஒப்பந்தத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை


தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கச்சத்தீவு ஒப்பந்தத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Feb 2022 4:36 AM IST (Updated: 22 Feb 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இலங்கை மந்திரி ஜீவன் தொண்டைமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

இலங்கையின் ராஜாங்க மந்திரி ஜீவன் தொண்டைமான் தலைமையிலான குழு தமிழகத்திற்கு வந்துள்ளது. அந்த குழுவில் இலங்கை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டைமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

கலந்தாலோசனை

அப்போது, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் பல்வேறு நல திட்டங்கள் தொடர்பாக முதல்-அமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டது. இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மாணவர்களுக்கு இந்திய அரசின் மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கான பட்டப்படிப்பை தொடர்வதற்கான 100 கல்வி இடங்களை தமிழக பல்கலைக்கழகங்களின் மூலம் பெறுவது,

இலங்கையில் விரைவில் அமையவிருக்கும் மலையக பல்கலைக்கழகத்திற்கான விரிவுரையாளர்கள் நியமனம், தொழில்சார் பணியாளர்களை தமிழக அரசின் உதவியுடன் நியமிப்பது மற்றும் தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் மலையக பல்கலைக்கழகத்தை இணைத்து நடத்துவதற்கான அங்கீகாரங்களை பெறுவது ஆகியவை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

கோரிக்கை மனு

மேலும், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் செயல்படும் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் மோட்டார் வாகன தொழில்நுட்பம், கட்டுமானம், கணினி தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொறியியல் ஆகிய துறைகளில் இந்திய தொழில்துறை நிபுணர்களால் பயிற்சி அளிப்பது தொடர்பாகவும்; மலையக பள்ளி ஆசிரியர்களுக்கான கணினி, அறிவியல், ஆங்கிலம் போன்ற கல்விசார் மேம்பாடு பயிற்சிகளை இந்திய கல்வியாளர்களால் வழங்குவது பற்றியும் விரிவாக பேசப்பட்டது.

பள்ளிக்கல்வியை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு சிக்கன முறையில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்ற வேளாண்மை தொழில் பயிற்சிகளையும், நிதி உதவிகளுக்கு ஏற்பாடு செய்வது; வேளாண்மைக்கான முதலீட்டு வாய்ப்புகளை தமிழக அரசின் மூலம் பெற்றுக்கொள்வது ஆகியவை தொடர்பாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ராஜாங்க மந்திரி ஜீவன் தொண்டைமான் வழங்கினார்.

கச்சத்தீவு ஒப்பந்தம்

பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான இந்த சந்திப்பின் மூலம் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், இலங்கையில் உள்ள மலையக மக்களுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மீனவர்களுக்கும், தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கும் இடையே ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்த கூடிய வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். இது தொடர்பாக கச்சத்தீவு ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்து அதை மறுஆய்வு செய்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதுபற்றி பரிசீலனை செய்வதாக முதல்-அமைச்சர் வாக்குறுதி அளித்தார். கச்சத்தீவு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகுதான் இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே ஒரு மோதல் போக்கு ஏற்பட்டது.

சிறையில் உள்ள மீனவர்கள்

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். அதேநேரத்தில் இங்கு சிறைகளில் இருக்கக்கூடிய இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய, இந்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக தமிழக சிறைகளில் இருந்து வருகின்றனர்.

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு உதவவேண்டும் என்று சிறையில் சந்தித்தபோது தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை

தற்போது தமிழர்களுக்கு உரிமைகள் சரியான அளவில் கிடைக்கிறதா? போரில் காணாமல் போன தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் கிடைத்துள்ளதா? என்று நீங்கள் கேட்டால், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.

அன்று அரசியல் காரணங்களால் தமிழ் மக்களுக்கு பாதிப்பு இருந்தது. தற்போதைய அரசு, மக்களை சமமாகத்தான் பார்க்கிறது. பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகிய பதவிகளைத் தவிர அரசியல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களிலும் தமிழர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார பின்னடைவு

இலங்கை அரசுக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவுடன் கலாசார ரீதியாக நட்பு கொண்டுள்ளோம். இலங்கை வளர்ந்து வரும் நாடு. அங்கு பொருளாதாரத்தை வளர்க்கவே சீனா நாட்டுடன் நட்புறவு கொண்டுள்ளோம்.

இலங்கை தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்போது பொருளாதார பிரச்சினை இருக்காது. எங்கள் நாட்டை பொறுத்தவரை தேயிலை, சுற்றுலா உள்ளிட்ட 3 முக்கிய துறைகள் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகள் போருக்கு பின்புகூட நாட்டை பொருளாதார ரீதியாக கட்டமைத்திருந்தோம். தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதி காலத்தில்...

இன்று மலையக தமிழர்களுக்கும் வாக்குரிமைகள் பெறப்பட்டுள்ளன. இருக்கும் உரிமைகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தில் சிங்களவர் முதல்-மந்திரியாக இல்லை. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலரும் தமிழர்கள்தான்.

இலங்கையில் போர் 2009-ம் ஆண்டுதான் முடிந்தது. அரசியல் தீர்வு கட்டாயம் தேவை. 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பலர் கஷ்டத்தில் உள்ளனர். இதில் அரசியல் தீர்வு மட்டுமின்றி அபிவிருத்தியும் நடந்தாக வேண்டும்.

இலங்கை தமிழர்கள் முகாமுக்கு தமிழக அரசு ரூ.300 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது, வரவேற்கத்தக்கது. தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது, குடியிருப்புகள் உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மூலம் இலங்கையில் செயல்படுத்தினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story