இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து ரூ.20 லட்சம் மோசடி - நிதி நிறுவன அதிபர் கைது
கண்ணூரில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து ரூ.20 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்காடு,
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 49). நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் நடத்தி வரும் நிதிநிறுவனத்துக்கு 25 வயதான இளம்பெண் ஒருவர் வேலையில் சேர்ந்தார்.
அவர் அந்த இளம்பெண்ணிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறியதுடன், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி ராஜேஷ் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளார்.
அப்போது அந்த இளம்பெண்ணின் தாயாரிடம் அதிகளவில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட ராேஜஷ், அந்த பணத்தை அபகரித்துக் கொள்ள திட்டமிட்டார். இதையடுத்து அவர் அந்த இளம்பெண்ணிடம் தனக்கு ெசாந்தமான நிலத்தை அடமானம் வைத்து ரூ.20 லட்சம் பெற்று உள்ளதாகவும் அதை மீட்க பணம் தேவைப்படுவதாகவும் கூறி உள்ளார்.
இதை நம்பிய அவர் தனது கணவர்தானே என்றுக்கூறி தனது தாயாரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொடுத்தார். பின்னர் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போதுதான் அவருக்கு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ராஜேசுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், அவர் இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோட்டயத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ராஜேசை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story