குடும்ப தகராறில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபம்
நாகர்கோவிலில், திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாகர்கோவில்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் தனுசியா(வயது 20). இவருக்கும், நாகர்கோவில் வாத்தியார்விளை வாதையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கொத்தனார் செல்வமூர்த்தி (34) என்பவருக்கும் கடந்த மாதம் 23-ந் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து புதுமண தம்பதியினர் வாத்தியார்விளையில் உள்ள செல்வமூர்த்தி வீட்டில் வசித்து வந்தனர்.
செல்வமூர்த்திக்கும் தனுசியாவிற்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி தனுசியா அவரது பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ேமலும் கணவன், மனைவி இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்தனர்.
இருப்பினும் தனுசியா மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் செல்வமூர்த்தி நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த செல்வமூர்த்தி, அறையில் சென்று பார்த்த போது தனுசியா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக தெரிகிறது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வமூர்த்தி கூச்சலிட்டு கதறி அழுதார். அவரது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தனுசியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் கடிதம் போன்ற குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
தனுசியா தற்கொலை செய்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நாகர்கோவிலுக்கு விரைந்து வந்து தனுசியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தனுசியாவின் தந்தை கணேசன் வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ேமலும் திருமணமாகி 1 மாதமான நிலையில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story