புதுச்சேரி சட்டசபையிலிருந்து திமுக காங்கிரஸ் வெளிநடப்பு
மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கோஷம் எழுப்பிய தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கோஷம் எழுப்பிய தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபை கூடியது
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 3-ந்தேதி நிறைவடைந்தது. சட்டசபை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் சட்டசபை இன்று கூடியது.
சட்டமன்றம் கூடியதும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. பின்னர் சட்ட முன்வரைவுகளுக்கு இசைவு அளித்ததை அறிவிக்க சபாநாயகர் செல்வம் சபையை நடத்தினார்.
பிரச்சினை
அப்போது எழுந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா ஏற்கனவே தாங்கள் கொடுத்திருந்த மனுக்கள் தொடர்பான பிரச்சினையை எழுப்பினார்.
அதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
சிவா: இந்த கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்த போகிறீர்கள்? மக்கள் பிரச்சினைகள் பற்றி நிறைய பேச வேண்டி உள்ளது. அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தைப்போல் ‘நீட்’ விலக்கு மசோதாவை நிறைவேற்றவேண்டும். மின்துறை தனியார் மயம் தொடர்பாக விவாதிக்கவேண்டும். சட்டசபையில் அறிவித்தபடி அரசு பணிகளில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படவில்லை. சட்டமன்ற அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை.
சபாநாயகர் செல்வம்: முதல்-அமைச்சர் அறிவித்த அறிவிப்புகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார்.
புதுச்சேரி முடக்கம்
சிவா: சபாநாயகர் பா.ஜ.க. தலைவராகவோ, அமைச்சர் போன்றோ பேசக்கூடாது. நீங்கள் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் பதிலை பெற்றுத்தர வேண்டும்.
நாஜிம் (தி.மு.க.): நாங்கள் இந்த மாநில மக்களுக்காக பேசுகிறோம். யாரையும் குறை கூற இங்கு பேசவில்லை.
சிவா: சபையை கூடுதல் நாட்கள் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள்? அதிகாரிகள் கூட உங்கள் கையில் இல்லை.
நாஜிம்: சபாநாயகரின் அலுவலகமே கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது.
சிவா: முதல்-அமைச்சர் அறிவித்தபடி அரசு துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படவில்லை. புதுவையை முடக்கி வைத்துள்ளார்கள். சபாநாயகர், சபாநாயகராக மட்டுமே இருக்கவேண்டும். பா.ஜ.க. தலைவராக அல்ல.
நாஜிம்: அரசுக்கு தடை எங்கு உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள்.
பெஸ்ட் புதுச்சேரி எங்கே?
சிவா: தேர்தலின்போது கூறினீர்களே மாநில அந்தஸ்து. அது என்னவாயிற்று? பிரதமர் அறிவித்த பெஸ்ட் புதுச்சேரி எங்கே?
சபாநாயகர்: விரைவில் பெஸ்ட் புதுச்சேரியாக மாறும்.
சிவா: புதிய ரெயில் திட்டங்கள், சுற்றுலா திட்டங்கள் எங்கே?
செந்தில்குமார் (தி.மு.க.): பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியில் 40 சதவீதம் தான் செலவிடப்பட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன. மத்திய பட்ஜெட்டில் புதுவை மாநிலத்துக்கான நிதியும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவா: புதுச்சேரிக்கு அபாயம் வந்துள்ளது.
தொழிற்சாலைகள் மூடல்
நாஜிம்: இப்படியே போனால் அரசாங்கத்தை நடத்த முடியாது. நாங்கள் உங்களுக்காகத்தான் பேசுகிறோம்.
சிவா: தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகிறது.
வைத்தியநாதன் (காங்): அரை நாள் சட்டசபை நடந்தால் எப்படி மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச முடியும்?
சிவா: தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி இப்போதுதான் கிடைக்கிறது. பொங்கல் பொருட்கள் அடுத்த பொங்கலுக்குத்தான் கிடைக்கும்.
நாஜிம்: முதலில் நிதித்துறை செயலாளரை மாற்றுங்கள்.
சிவா: பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்கிறோம். அது என்னவாயிற்று?
சபாநாயகரின் இருக்கை முன்பு...
தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பிய நிலையில், ஆளும் கட்சி தரப்பில் முதல்-அமைச்சர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அமைச்சர்கள் அமைதி காத்தனர். தொடர்ந்து சபாநாயகர் செல்வம் அடுத்த அலுவலுக்கு செல்ல முயன்றார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை பதாகைகளை கைகளில் ஏந்தி சபாநாயகரின் இருக்கை முன்பு சென்று கோஷங்களை எழுப்பினா். அவர்களை மேலும் முன்னேறி செல்ல முடியாதபடி சபைக்காவலர்கள் தடுத்தனர்.
தி.மு.க.-காங். வெளிநடப்பு
இதைத்தொடர்ந்து சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் சிவா சட்டசபையிலிருந்து வெளியேறினார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக.தியாகராஜன் ஆகியோரும் வெளியேறினார்கள்.
தி.மு.க.வுக்கு ஆதரவாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ. ஆகியோரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story