போலீசாரை தெறிக்கவிட்ட பொழுதுபோக்கு பைக் திருடன் - வைரலாகும் ஜாலியான வாக்குமூல வீடியோ


போலீசாரை தெறிக்கவிட்ட பொழுதுபோக்கு பைக் திருடன் - வைரலாகும் ஜாலியான வாக்குமூல வீடியோ
x
தினத்தந்தி 23 Feb 2022 7:12 PM IST (Updated: 23 Feb 2022 7:12 PM IST)
t-max-icont-min-icon

போலீசாரை தெறிக்கவிட்ட பொழுதுபோக்கு பைக் திருடனின் வாக்குமூல வீடியோ வைரலாகி வருகின்றது.

தேனி,

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் தனது இரு சக்கர வாகனம் திருடு போய்விட்டது என்று பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  

இந்த நிலையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு வீட்டில் திருட முயன்ற நபரை பிடித்த அப்பகுதிமக்கள், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(வயது31) என்றும், பால் வியாபாரியின் இரு சக்கர வாகனத்தை திருடியவர் என்பது தெரியவந்தது. 

இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது தூய தமிழில் கவிதை நடையில் ஜாலியாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதனை கேட்டு போலீசார் வயிறு குலுங்க சிரித்தனர். இந்த வாக்குமூலத்தை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகின்றது. அந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வாக்குமூல வீடியோவில் அவர் பேசியதாவது:-

திறந்து கிடந்த ஒரு வீட்டில் நாய் நுழைந்தது போல நுழைந்தேன். அந்த வீட்டில் விலை உயர்ந்த ஆடம்பரமான இருசக்கர வாகனம் சாவியோடு கண்ணாடி மாளிகையில் நின்று கொண்டிருந்தது. 

அந்த வீட்டுக்குள் போகும்போது ரம்மியமான, அமைதியான காட்சிகள் நிறைந்த ஒரு தோற்றம், ரசனைக்குரிய, சிந்தனைக்குரிய சிற்பிகளின் எழுத்துக்கள் நிறைந்த வாசகங்கள் இருந்தன. இரு சக்கர வாகனம் சாவியோடு இருந்தது. அது, ஆசையை தூண்டும் வகையில், தப்பு செய்வதற்கு அவர்கள் வாய்ப்பு கொடுத்திருந்தனர்.

பயத்திற்கே பயம் காட்டும் அஜித்தைப் போல, அவர் ரசிகனாகிய நான் அந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஆண்டிப்பட்டி கணவாயை தாண்டிய பிறகு போலீஸ் சோதனைச் சாவடி அருகில் செயின் அறுந்து விட்டதன் காரணமாக ஒரு ஓரத்தில் நிறுத்தி வைத்திருகிறேன். என்று தெரிவித்தார்.



இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில்,

அவரிடம் நடத்திய விசாரணையில் தேனி, மதுரை மாவட்டங்களில் சாலையில் சாவியோடு நிற்கும் இரு சக்கர வாகனங்களை திருடி ஓட்டி வந்துள்ளார். 

அப்போது வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து விட்டாலோ அல்லது பழுதாகி நின்று விட்டாலோ அதே இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று விடுவதை பொழுதுபோக்காக செய்து வந்தது தெரியவந்துள்ளது.  

இந்த வழக்கில் ராதாகிருஷ்ணனின் மனநிலை மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை எச்சரித்து அனுப்பி வைத்து உள்ளோம். என்று தெரிவித்தார். 


Next Story