ஜெயலலிதா 74-வது பிறந்தநாள்.. தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை...!
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள், ஜெயலலிதாவின் சிலைகள் மற்றும் படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதே போல சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவிக்க காலை 10 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் வந்தபோது அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷமிட்டனர்.
ராயப்பேட்டை ரவுண்டானா அருகில் இருந்து கட்சி அலுவலகம் வரை அ.தி.மு.க. தொண்டர்கள் அவர்களை வரவேற்று கொடிகளுடன் நின்றனர்.
கட்சி அலுவலகத்திற்கு அடுத்தடுத்து வந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் இருவரும் மாலை அணிவித்தார்கள்.
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், பா.பென்ஜமின், எஸ்.பி. வேலுமணி, மா.பாண்டியராஜன், கே.பி.அன்பழகன், தங்கமணி, கோகுல இந்திரா, வளர்மதி மற்றும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன், துணை செயலாளர் இ.சி.சேகர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. கட்சி கொடியை வைத்து இனிப்பு வழங்கினார்கள். பின்னர் இருவரும் கட்சி அலுவலகத்திற்குள் சென்று சிறிது நேரம் இருந்தனர்.
முன்னதாக அவர்களை அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கட்சி அலுவலகம் இன்றும் வழக்கம் போல் காட்சி அளித்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவிய போதும் கூட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க.வினர் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் எப்போதும் போல உற்சாகமாக காணப்பட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையின் இயக்குனர் மகேஷன் காசிராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story