பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பலி


பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 24 Feb 2022 10:53 PM IST (Updated: 24 Feb 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பம் அருகே வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பலியானான்.

அரியாங்குப்பம் அருகே வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பலியானான்.
5 வயது சிறுவன்
அரியாங்குப்பம் அருகே ஓடைவெளி சின்ன வீராம்பட்டினம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தவமணி என்ற கிருஷ்ணன் (வயது 43). கொத்தனார். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு குருமூர்த்தி (5) என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர்.
இன்று மதியம் வீட்டின் பின்புற பகுதியில் சிறுவன் குருமூர்த்தி  விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் அவனை காணாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள தரைக்கிணற்றில் சிறுவன் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது.
பிணமாக மீட்பு
இதுபற்றி அரியாங்குப்பம் போலீஸ் மற்றும் புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். கிணறு பாழடைந்து இருந்ததால் வீரர்கள் உள்ளே இறங்காமல், பாதாள சங்கிலி உதவியுடன் சிறுவனை தேடினர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சுற்று வட்டார கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சுமார் ஒரு மணிநேர தேடுதலுக்கு பிறகு சிறுவன் குருமூர்த்தி பிணமாக மீட்கப்பட்டான். மகனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதது, கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.
கிணற்றை மூடவேண்டும்
சிறுவனின் உடலை அரியாங்குப்பம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனை பலிகொண்ட பராமரிப்பு இல்லாத கிணற்றை மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story