உக்ரைனில் தவிக்கும் 800 தமிழர்களின் இருப்பிட விவரம் சேகரிப்பு


உக்ரைனில் தவிக்கும் 800 தமிழர்களின் இருப்பிட விவரம் சேகரிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 2:33 AM IST (Updated: 25 Feb 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து வரும் மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைக்க, மாநில தொடர்பு அலுவலராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இ-மெயில் மூலம் 800 தமிழர்களின் இருப்பிடம் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னை,

உக்ரைன் நாட்டு மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக, தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாநில தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநில தொடர்பு அலுவலர் நியமனம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்க, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாநில தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்களையும் (பொது), டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் உள்ளுறை ஆணையரும் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு அருகில் உள்ள தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு அவர்களின் விவரத்தை தெரிவிக்கலாம்.

அவசர உதவி மையம்

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070-ல் தொடர்பு கொள்ளலாம். அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரசை 9445869848, 9600023645, 9940256444 என்ற செல்போன் எண்ணிலும், 044-28515288 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், டெல்லியில் தமிழ்நாடு பொதிகை இல்லத்தில் செயல்படும் உக்ரைன் அவசர உதவி மையத்தை 9289516716 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும், ukrainetamils@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விவரங்கள் சேகரிப்பு

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கூறியதாவது:-

உக்ரைனில் போர் மூண்டுள்ள நிலையில், அங்குள்ள மாணவர்கள் உதவிக்காக தொடர்பு கொள்ளும் வகையில், 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை, 700 மாணவர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களுக்கு தேவையான உதவி என்ன?, அவர்கள் உக்ரைனில் எந்த பகுதியில் இருக்கின்றனர்?, தமிழ்நாட்டில் சொந்த ஊர் எது? போன்ற விவரங்களை இ-மெயில் மூலம் அனுப்ப கேட்டோம். இதுவரை 800-க்கும் மேற்பட்ட தகவல்கள் வரப்பெற்றுள்ளன.

இந்த தகவலின் அடிப்படையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு, தமிழர்கள் இருக்கும் பகுதிகளை தெரிவித்து, ‘வந்தே பாரத்' போன்ற சிறப்பு விமானங்களை இயக்கி, அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story