புதுச்சேரி மாணவர்கள் 8 பேர் உக்ரைனில் தவிப்பு விரைந்து மீட்க பிரதமர் மோடிக்கு ரங்கசாமி கடிதம்
உக்ரைனில் தவித்து வரும் புதுச்சேரி மாணவர்கள் 8 பேரை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனில் தவித்து வரும் புதுச்சேரி மாணவர்கள் 8 பேரை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
8 மாணவர்கள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. கடந்த 2 நாட்களாக குண்டுமழை பொழிந்து வருகிறது.
உக்ரைனில் தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த தலா 4 மருத்துவ மாணவர்கள் உள்பட 8 பேர் தவித்து வருவது தெரியவந்துள்ளது. அதாவது புதுவை நைனார்மண்டபம் கிழக்கு வாசல் நகரை சேர்ந்த விஷாலினி, ரெட்டியார்பாளையம் சிவசக்தி நகரை சர்ந்த அரவிந்தன், தேவகி நகரை சேர்ந்த மதன்ராஜ், கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த அக்ஷயா, காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த பிரவீணா, கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த சந்துரு, பி.எஸ்.ஆர்.நகரை சேர்ந்த கார்த்தி விக்னேஷ், சிவசங்கர் ஆகியோர் உக்ரைனில் சிக்கியுள்ளனர்.
இதனால் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவர்களில் சிலர் சந்தித்து தங்கள் குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்கள் நன்றி
இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியாவிற்கான தூதர் பார்த்தசத்பதி ஆகியோரை தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
மாணவர்களை தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரிகள் பேசினார்கள். அப்போது மாணவர்கள் அனைவரும் தங்களது கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். போர் நடந்து வரும் உக்ரைனில் இருந்து தங்களை மீட்க எடுத்து வரும் முதல்-அமைச்சரின் நடவடிக்கைக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பிரதமருக்கு கடிதம்
இதுகுறித்து முதல்-அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போர் காரணமாக உக்ரைனில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு அங்கு படிக்கும் புதுச்சேரி மாணவர்களை பத்திரமாக வீடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்களது பெற்றோர் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியாவிற்கான தூதர் பார்த்த சத்பதி ஆகியோரை தொடர்புகொண்டு உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை பத்திரமாக மீட்டு புதுச்சேரிக்கு அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் புதுச்சேரி மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story